பெண் பாதுகாப்பு குறித்த காந்தியின் கருத்தை பகிர்ந்த இயக்குநர் அட்லீ
|பெண் பாதுகாப்பு குறித்த மகாத்மா காந்தி கூறிய கருத்தை தனது எக்ஸ் தள பதிவில் இயக்குநர் அட்லீ பகிர்ந்துள்ளார்.
சென்னை,,
தமிழ் திரையுலகில் இருந்து இன்று ஆங்கில திரையுலகம் வரை சென்று கொண்டிருக்கும் முன்னணி இயக்குநர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருகிறார். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். 2016-ம் ஆண்டு வெளியான தெறி படம் ஹிட் படமாக அமைந்தது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே மெர்சல் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ.
இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படம் சுமார் ஆயிரத்து 200 கோடி வசூல் செய்தது. இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் அவரும், அவரது மனைவி ப்ரியாவும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தெறி படத்தின் இந்தி ரீமேக்கை ப்ரியா அட்லீ தயாரிக்கிறார்.
பெண் பாதுகாப்பு குறித்து மகாத்மா காந்தி சொன்ன கருத்தை தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் அட்லீ. நாடு முழுவதும் இன்று 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
"இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்" என்றார் மகாத்மா காந்தி. அவரது அந்த கருத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குநர் அட்லீ.
சுதந்திர தின உரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.