சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்ட காரணம் தெரியுமா?
|சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருந்த படம் ஒன்று கைவிடப்பட்டதாக பாடலாசிரியர் கபிலன் கூறினார்.
சென்னை,
விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் 'தி கோட்'. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் கபிலன் வைரமுத்து பாடலாசிரியராக பணியாற்றுகிறார். இந்நிலையில், பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க இருந்த படம் ஒன்று கைவிடப்பட்டது குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
'சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ராயை வைத்து ஒரு படம் எடுக்க நீண்ட காலமாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த படத்தை மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்க இருந்தார். 2019-ம் ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பமாகின.
ஆனால், கொரோனா தொற்று அப்போது பரவ ஆரம்பித்ததால் படப்பிடிப்பு தடைபட்டது. மேலும், இயக்குனர் கே.வி.ஆனந்தும் மறைந்ததால் படம் முற்றிலும் கைவிடப்பட்டது', என்றார்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் 2021ல் மாரடைப்பால் காலமானார். 'அயன்', 'கோ' 'காப்பான்' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.