அக்சய் குமாரின் 'பூத் பங்களா' படத்தில் வாமிகா கபி?
|14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் பிரியதர்ஷனுடன் அக்சய் குமார் இணைந்துள்ளார்.
சென்னை,
பஞ்சாபி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் வாமிகா கபி. இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'ஜப் வி மெட்' என்ற இந்தித் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதன்பிறகு, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'து மேரா 22 மெயின் தேரா 22' படத்தில் யோ யோ ஹனி சிங் மற்றும் அமரீந்தர் கில் ஆகியோருடன் சேர்ந்து நடித்ததன் மூலம் இவருக்கு பெரிய பெயர் கிடைத்தது.
தொடர்ந்து, 'இஷ்க் பிராண்டி' , 'நிக்கா ஜைல்டார் 2' , 'பராஹுனா', 'தில் தியான் கல்லன்' , 'நிக்கோ ஜைல்டார் 3' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் நடிக்கும் 'பேபி ஜான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் மாதம் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், 'பூத் பங்களா' என்ற பாலிவுட் படத்தில் வாமிகா கபி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் 'பூத் பங்களா' படத்தில் அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அக்சய் குமார் 14 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷனுடன் இணைந்துள்ளார். கடைசியாக இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பூல் பூலையா படத்தில் ஒன்றாக பணியாற்றினர். இப்படத்தில் 3 கதாநாயகிகள் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில், வாமிகா கபியும் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.