ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்
|பிறந்த நாளன்று துருவ் விக்ரம் ரசிகர்களை சந்தித்து கொண்டாடியது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
சென்னை,
'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம். தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள், துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த 'மகான்' திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக திரையிடப்பட்டது. இதனை ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார். பிறந்த நாளன்று துருவ் விக்ரம் ரசிகர்களை சந்தித்து கொண்டாடியது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
இதனிடையே நடிகர் துருவ் விக்ரம் தற்போது முன்னணி நட்சத்திர இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைசன்- காளமாடன்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தின் புதிய போஸ்டர் துருவ் விக்ரமின் பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்டிருந்தது.