நயன்தாராவின் குற்றச்சாட்டுகளுக்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பதில்
|நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு இதுவரை தனுஷ் எந்த பதிலும் தெரிவிக்காதநிலையில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார்.
சென்னை,
நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவானது. இது கடந்த 18-ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
இதற்கு முன்பு வெளியான இதன் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த வீடியோவுக்கு எதிராக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதனையடுத்து, தன்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் நடிகர் தனுஷ் பழிவாங்குகிறார் என்று நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து அறிக்கை வெளியிட்டார். இதுவரை தனுஷ் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் தெரிவிக்காதநிலையில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'எங்களுக்கு வேலைதான் முக்கியம். நம்மைத் துரத்துபவர்களுக்கோ, நம்மைப் பற்றிப் பேசுபவர்களுக்கோ பதில் சொல்ல நேரமில்லை. என்னைப் போலவே என் மகனும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்' என்றார்.