குற்றச்சாட்டு தொடர்பாக தனுஷ் பதிலளிப்பார் - நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர் விளக்கம்
|நயன்தாராவுக்கு நடிகைகள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் வருகிற 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த ஆவணப்படத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த படத்தின் காட்சிகள் இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தனுஷ் மீது குற்றம்சாட்டி நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகளையும் பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில் உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எவ்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில் அந்த முடிவையே கைவிட்டு ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ. 10,00,00,000 (பத்து கோடி) நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமாக இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல் ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.
'நானும் ரௌடிதான்' படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காபி ரைட் (Copy right) காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன" என்று நயன்தாரா அதில் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. நயன்தாராவுக்கு நடிகைகள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாராவின் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் தனுஷ் பதிலளிப்பார் என்று வழக்கறிஞர் அருண் தெரிவித்துள்ளார். முன்னதாக ரூ.10 கோடி நஷ்ட ஈடுகேட்டு தனுஷ் சார்பில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தநிலையில் வழக்கறிஞர் அருண் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.