'விடுதலை-2' படத்தை பாராட்டிய தனுஷ்
|வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 20-ம் தேதி வெளியான 'விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை 2'. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தற்போது வரை உலகளவில் ரூ.24 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில், விடுதலை 2 படத்தை பாராட்டி நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "விடுதலை 2 படம் மிகவும் அருமையாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் உள்ளது. முதல் காட்சியில் இருந்து கடைசி வரை கவர்ந்துள்ளது. இது மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறனின் சிறப்பான படைப்பு. இளையராஜா சாரின் இசை மிகவும் பிடித்திருந்தது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு பிரமாதம். மிகுந்த ஆர்வத்துடனும் அன்புடனும் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காகப் பாராட்டுகள் எல்ரெட் குமார். மேலும் படக்குழுவிற்கு அன்பான வாழ்த்துகள்" என அதில் பதிவிட்டுள்ளார்.