மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு
|3-வது முறையாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை
சென்னை,
தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இதனையடுத்து இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்று மனுதாரர் இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், மீண்டும் இருவரும் ஆஜராகாததால் விசாரணையை இன்று அதாவது நவ.2ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதன்படி, இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
3-வது முறையாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் இன்றும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.