< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்

தினத்தந்தி
|
8 Sept 2024 8:36 PM IST

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு,அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒப்புதல் தரப்பட்ட தீர்மானங்கள் விபரம்;

1) தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள திரைப்படம் மற்றும் நாடகத்துறை சார்ந்த கலையுலக பெருமக்களின் வளர்ச்சிக்காக, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கியும், திட்டங்கள் வகுத்தும், பெரும் துணையாக செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த வணக்கமும், நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2) தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் விளங்கி வரும் அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த வணக்கமும், நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) 01.04.2023 முதல் 08.09.2024 வரை நடந்த செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்திற்கும் பொதுக்குழுவின் ஒப்புதல் கோரப்பட்டு, அது பேரவை உறுப்பினர்களின் ஏகமனதான ஒப்புதலோடு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

4) பேரவையில் வாசிக்கப்பட்ட, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கைக்கு பொதுக்குழுவின் ஒப்புதல் கோரப்பட்டு, அது பேரவை உறுப்பினர்களின் ஏகமனதான ஒப்புதலோடு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

5) தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2024–2025ம் ஆண்டுக்கான சங்க சட்ட ஆலோசகராக .கிருஷ்ணா ரவீந்திரனை நியமிக்க பொதுக்குழுவின் ஒப்புதல் கோரப்பட்டு, அது பேரவை உறுப்பினர்களின் ஏகமனதான ஒப்புதலோடு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

6) தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2024–2025ம் ஆண்டுக்கான சங்க கணக்கு தணிக்கையாளராக ஸ்ரீராம்சுந்தர், SRNR & அசோசியேட்ஸ் அவர்களை நியமிக்க பொதுக்குழுவின் ஒப்புதல் கோரப்பட்டு, அது பேரவை உறுப்பினர்களின் ஏகமனதான ஒப்புதலோடு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

7) சங்கம் சார்ந்த நிர்வாக செயல்பாடுகள், கட்டிட கட்டுமானப் பணிகள், சங்க கட்டிடம் கட்டி முடிக்க நிதி திரட்டும் நடவடிக்கைகள், நடிகர் சங்கம் மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை சார்ந்த வழக்குகள் சம்பந்தமாக முடிவெடுத்தல், சங்க பாதுகாப்பிற்காக நீதிமன்ற ஆவணங்களில் கையொப்பமிடுதல் மற்றும் சங்க வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும், நிர்வாகக்குழு அவ்வப்போது பொருத்தமான முடிவெடுத்து செயலாற்ற, பொதுக்குழுவின் ஒப்புதல் கோரப்பட்டு, அது பேரவை உறுப்பினர்களின் ஏகமனதான ஒப்புதலோடு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

8) சங்க விதி எண் 11-ன்படி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர்கள் ஆண்டுதோறும் சந்தா கட்ட வேண்டும். அவ்விதம், 2024- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் ஆண்டு சந்தா கட்டத் தவறிய உறுப்பினர்களுக்கு, சங்க விதிப்படி 2024, மார்ச் மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் அளித்தும், தாமத கட்டணத்துடன் சந்தா செலுத்தத் தவறிய 6 தொழில்முறை உறுப்பினர்கள், தாமாகவே சங்க உறுப்பினர் அந்தஸ்தை இழந்தார்கள் என்பதை பொதுக்குழுவிற்கு தெரிவித்து, அதற்கு பொதுக்குழுவின் ஒப்புதல் கோரப்பட்டு, அது பேரவை உறுப்பினர்களின் ஏகமனதான ஒப்புதலோடு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

9) தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நடிகர் சங்க அறக்கட்டளையின் புதிய கட்டிடம் முழுவதுமாக கட்டி முடிக்க 30 சதவீதம் மட்டுமே மீதமிருந்த சூழலில், தேர்தல் - வழக்கு என சுமார் மூன்று ஆண்டுகள் விரயமான பின், பெருமுயற்சிக்கு பிறகு, பொதுக்குழுவின் தீர்மானப்படி, கட்டிடம் கட்டி முடிக்க வங்கிக் கடன் ரூ.25 கோடிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் அனுமதி ஆணை பெறப்பட்டு, வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்த கடனுக்கான பிணைத்தொகையாக ரூ.11.50 கோடி வைப்புநிதியாக வங்கியில் இடப்பட்டு, தற்போது கட்டிடம் கட்டப்பட்டு வருவது குறித்து பேரவைக்கு விரிவாக தெரிவிக்கப்பட்டது. இயன்ற விரைவில் கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெறும் என்பதும் தெரிவிக்கப்பட்டது. அவ்வகையில், சங்கம் பெற்ற வங்கிக் கடன் தொகையை திரும்ப செலுத்துவதற்காக, நிர்வாகக்குழு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுக்குழுவின் முன்ஒப்புதல் கோரப்பட்டு, அது பேரவை உறுப்பினர்களின் ஏகமனதான ஒப்புதலோடு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

10) சங்க உறுப்பினர் S.R.சேகர் (உ.எண்.4319) அவர்கள் சங்க சட்ட விதி எண்: 26-ன் அடிப்படையில், உறுப்பினர்கள் சார்பாக பேரவையில் ஒரு தீர்மானத்தை முன் வைக்க, 23.08.2024 தேதியிட்ட கடிதம் வாயிலாக, 311 உறுப்பினர்களின் கையெழுத்துகளோடு, சங்க அலுவலகத்தில் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார். சங்கவிதிப்படி, சங்கத் தலைவரின் முன் அனுமதியோடு, மேற்கூறிய கடிதத்தில் குறிப்பிட்ட தீர்மானங்களை பேரவையின் முன் வைக்க பொதுக்குழு கூட்டத்தில் திரு.S.R.சேகர் அவர்கள் அனுமதிக்கப்பட்டார். அவர் பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைத்த தீர்மானங்கள் மூன்று.

அ) நமது சங்க உறுப்பினர்களான பெண்களுக்கு சூட்டிங் நடக்கும் இடங்களில் தரமான உடை மாற்றும் அறைவசதி, கழிவறை வசதி மற்றும் உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய தயாரிப்பாளர்களோடு பேசி ஆவன செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆ) தயாரிப்பாளர்கள் சங்கம் முன்பே உறுதி செய்தபடி ஜிம் பாய்ஸ், ரிச் பாய்ஸ், ரிச் கேர்ள்ஸ் போன்ற பிரிவுகளின் மொத்த பயன்பாட்டில், நமது சங்க உறுப்பினர்களுக்கு 50% வேலை வாய்ப்பை கட்டாயமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இ) சங்க கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் முடியாத நிலையில், அது நிறைவடைந்து முழுமையாக செயல்படத் துவங்கும் வரையில், அந்த பணியை துவங்கி அதை செயல்படுத்தி வரும் தற்போதைய சங்க நிர்வாகமே தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும். வங்கி கடன் வாங்கி கட்டிடப் பணி முடிக்கும் நிலைமை இருக்கையில், சங்க நிதியின் பெரும் பங்கை தேர்தலுக்கு விரயமாக்காமல், மேற்சொன்னபடி தற்போதைய நிர்வாகமே தொடர்ந்து பொறுப்பு வகிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேற்காணும் தீர்மானங்களில் அ) மற்றும் ஆ) ஆகிய இரு தீர்மானங்கள் குறித்தும் தன்னிச்சையாக தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவெடுக்க இயலாது. மேலும், சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அளிக்கப்பட்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பரிந்துரைகளில், மேற்காணும் தீர்மானங்கள் அ) மற்றும் ஆ) இரண்டுமே இடம்பெற்றுள்ளது. ஆகவே, தயாரிப்பாளர்கள் சங்கத்தோடு கலந்தாலோசித்து மட்டுமே இது தொடர்பான முடிவெடுக்க இயலும் என்பதால் அந்த இரு தீர்மானங்களையும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பேரவை முடிவு செய்ய இயலாது.

தீர்மானம் இ) பேரவையின் ஒப்புதலுக்காக முன் வைக்கப்பட்டு, அதன் மீதான விவாதத்திற்குப் பிறகு, தற்போதைய ஒட்டுமொத்த சங்க நிர்வாகமே, தேர்தலின்றி தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு முதல் 2028 ஆண்டு வரையிலான காலகட்டம் வரையிலும் நிர்வாகப் பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற தீர்மானம் பொதுக்குழுவின் முன் வைக்கப்பட்டு, அதற்கு பேரவையின் ஒப்புதல் கோரப்பட்டு, பேரவை உறுப்பினர்களின் ஏகமனதான ஒப்புதலோடு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பேரவை கூட்டத்தில், மேற்காணும் தீர்மானங்கள் யாவும் எந்தவித எதிர்ப்பும், மறுப்பும் இன்றி, பொதுக்குழுவில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவராலும் ஏக மனதாக ஒப்புக்கொள்ளப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்