மலையாளத்தில் முதல் படம் - படப்பிடிப்பை நிறைவு செய்த அனுஷ்கா ஷெட்டி
|தமிழ், தெலுங்கு படங்களில் கொடி கட்டி பறந்த அனுஷ்கா தற்போது மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார்.
சென்னை,
அருந்ததி பேய் படத்தில் நடித்து பிரபலமான அனுஷ்கா ஷெட்டி, தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, மாதவன், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் பாகுபலி முக்கிய படமாக அமைந்தது. இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டி நடித்து பின்னர் குறைக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன.
இந்நிலையில், இதுவரை தமிழ், தெலுங்கு படங்களில் கொடி கட்டி பறந்த அனுஷ்கா தற்போது மலையாள படமொன்றில் அறிமுகமாக இருக்கிறார். 'ஹோம்' படத்தை இயக்கிய பிரபலமான ரோஜின் தாமஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு 'கத்தனார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் ஜெயசூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா ஷெட்டி நடித்து இருக்கிறார்.
மேலும், இவர்களுடன் வினீத், பிரபுதேவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படும்நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் ஜெயசூர்யா புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.