ஆவணப்படத்தை இயக்கி விருது வென்ற நடிகர் சூர்யாவின் மகள்!
|நடிகர் சூர்யாவின் மகள் தியா 'லீடிங் லைட்' என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமா துறையில் நட்சத்திர ஜோடியான நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தியா (17) எனும் மகளும் தேவ் (14) எனும் மகனும் உள்ளனர். இதில் தியா மும்பையில் படித்து வருகிறார். அவரும் தனது பெற்றோர்களை போலவே சினிமாவில் துறையில் ஆர்வம் அதிகமாக உள்ளது என தெரிகிறது. சமீபத்தில் மாணவர்களுக்கான குறும்பட போட்டி அவரது பள்ளியில் நடைபெற்றது. அதில் தியா கலந்து கொண்டார்.
'திரிலோகா' இன்டர்நேசனல் பிலிம்பேர் விருது நடத்திய போட்டியில், 'லீடிங் லைட்' (Leading Light) என்ற ஆவணப்படத்தினை எழுதி, இயக்கினார் தியா. இந்த ஆணவப்படம் திரைக்கு பின்னால் இருக்கும் பெண்களின் கதைகளை பேசும் படம் என கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்திற்காக சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்தினை இயக்கியதற்காக இரண்டு விருதுகளை தியா வென்றுள்ளார். தியா வெற்றி பெற்றதை நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இது குறித்து ஜோதிகா தனது பதிவில் கூறியிருப்பதாவது,
"சினிமா துறையில் ஒளிப்பதிவு தொடர்பான வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஆவணப்படமாக எடுத்ததுக்கு பெருமைப்படுகிறேன் தியா. இதேபோன்று தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒளிப்பதிவு தொடர்பான வேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிகொண்டு வந்ததற்கு மிக்க நன்றி" என்று அதில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அதேபோல நடிகர் சூர்யா தனது பதிவில் கூறியதாவது,
"இந்த ஆவணப்படத்தை உருவாக்கியதற்காக நான் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன். திரைக்குப் பின்னால் இருக்கும் அற்புதமான பெண்களுக்கு நீங்கள் எப்படி குரல் கொடுத்தீர்கள் என்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது, இது உங்கள் அற்புதமான பயணத்தின் ஆரம்பம் என்று எனக்குத் தெரியும். உங்கள் ஆர்வத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள், உங்கள் அப்பாவாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் இந்த பாதை உங்களை எங்கு அழைத்துச் செல்லும் என்று காத்திருக்க முடியாது. மேலும் உங்களுக்கு என் அன்புகளும் பாராட்டுகளும்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.