< Back
சினிமா செய்திகள்
நடிகை கஸ்தூரிக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்
சினிமா செய்திகள்

நடிகை கஸ்தூரிக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தினத்தந்தி
|
17 Nov 2024 2:46 PM IST

தெலுங்கர்கள் குறித்து அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை,

சென்னையில் கடந்த 3-ந் தேதி பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

இருப்பினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டார்.

இவ்வாறு நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அவரை கைது செய்வதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து நடிகை கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இருப்பதாக சென்னை தனிப்படை போலீசாருக்கு நேற்று, ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று நடிகை கஸ்தூரியை கைது செய்தனர்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை போலீசார் இன்று சென்னை அழைத்து வந்தனர்.சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின் நடிகை கஸ்தூரிக்கு, வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்து செல்லப்பட்ட போது, 'அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்' என கோஷம் எழுப்பினார் கஸ்தூரி.

மேலும் செய்திகள்