'கூலி' படத்தின் புதிய அப்டேட்
|‘கூலி’ படக்குழு ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக படக்குழு ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி பாலிவுட் நடிகர் அமீர்கான் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். தற்போது இவர் ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் இணையாய் இருக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி திரைப்படத்தை அடுத்தாண்டு மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளான வருகிற 12-ந் தேதியில் முக்கிய அப்டேட்டுகள் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.