காவல்துறையினரை இழிவுபடுத்தியதாக 'புஷ்பா 2' படக்குழு மீது காங்கிரஸ் பிரமுகர் புகார்
|‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் காவல்துறையினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக காங்கிரஸ் பிரமுகர் புகார் அளித்துள்ளார்.
ஐதராபாத்,
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்து வருகிறது. முன்னதாக இந்தப் படத்துக்கு தெலுங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்திருந்தார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளிவந்தார். இந்த சூழலில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுனின் வருகை தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என குற்றம் சுமத்தினார். 'புஷ்பா 2' பட தயாரிப்பாளர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினரான தீன்மர் மல்லன்னா 'புஷ்பா 2' படத்தின் காட்சிகள் காவல்துறையினரை இழிவுபடுத்தும் விதத்தில் இருப்பதாக ரச்சகொண்டா பகுதி காவல்துறையில் நேற்று புகார் அளித்தார். புஷ்பா 2 படத்தின் குறிப்பிட்ட சில காட்சிகளில் காவல்துறையினரை தவறாக சித்தரித்து, ஐபிஎஸ் அதிகாரி இருக்கும் நீச்சல் குளத்தில் கதாநாயகன் சிறுநீர் கழிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது காவல்துறையினரை அவமதித்ததாகக் குறிப்பிட்டு படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். இத்தகைய காட்சிகள் மக்களுக்கு அரசு நிர்வாகம் மீது நம்பிக்கை இழக்கச்செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.