டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகரை அவமதித்ததாக எழுந்த சர்ச்சை - விளக்கமளித்த இசையமைப்பாளர்
|'மனோரதங்கள்' தொடரின் டிரெய்லர் கடந்த 15-ந் தேதி வெளியானது.
கொச்சி,
எம்.டி.வாசுதேவனின் திரைக்கதையில் உருவான ஒன்பது படங்களின் தொகுப்பை கொண்டு 'மனோரதங்கள்' தொடர் உருவாகி உள்ளது. இந்தத்தொடரில் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் இந்த தொடருக்கு இசையமைத்துள்ளார்.
தொடரின் அதிகாரபூர்வ டிரெய்லரை தயாரிப்பாளர்கள் கொச்சியில் கடந்த 15-ந் தேதி வெளியிட்டனர். இந்த 'மனோரதங்கள்' டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் ஆசிப் அலி இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். அப்போது, இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண், ஆசிப் அலியை அவமரியாதை செய்யும் விதமாக அவரை கவனிக்காமல் விருதினை பெற்றதாக இணையத்தில் வீடியோ பரவி சர்ச்சையானது.
வீடியோ வைரலான பிறகு, இசையமைப்பாளர் 'அகங்காரம்' கொண்டவர் என்றும் முகத்தில் புன்னகையுடன் அந்த சூழ்நிலையை சுமூகமாக கையாண்ட ஆசிப் அலியை பாராட்டியும் வந்தனர்.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்த ரமேஷ் நாராயண், யாரையும் புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்றும், ஆசிப்பிடம் இருந்து நினைவுப் பரிசு பெறும்போது இயக்குனர் ஜெயராஜும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பியதாகவும் கூறினார். மேலும், ஆசிப் அலியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அப்படி நடந்ததற்கு வருந்துவதாகவும் கூறினார்.