நடிகர் பெயரில் மோசடி- நடிகை மீது போலீசில் புகார்
|நடிகை திகங்கனா சூர்யவன்ஷி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
தமிழில், ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்த 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் நாயகியாக நடித்தவர் திகங்கனா சூர்யவன்ஷி. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 'ஷோ ஸ்டாப்பர்' என்ற வெப் தொடரில் ஜீனத் அமன், திகங்கனா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், நடிகை திகங்கனா சூர்யவன்ஷி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த தொடரை இயக்கிய மணீஷ் ஹரி சங்கர் கூறும்போது, ''ஷோ ஸ்டாப்பர் வெப் தொடர் படப்பிடிப்பில் திகங்கனா பங்கேற்று நடித்தபோது எனக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்சய்குமார் ஆகியோரை தனிப்பட்ட முறையில் தெரியும் என்று தயாரிப்பாளரிடமும், என்னிடமும் கூறினார்.
வெப் தொடரை வெளியிட அக்சய்குமாரிடம் பேசுவதாகவும், இதற்காக தனக்கு 75 லட்சம் ரூபாயும் அக்சய்குமார் பெயரில் ரூ.6 கோடியும் தரவேண்டும் என்று கேட்டார்.
அக்சய்குமாரிடம் காண்பிக்க வேண்டும் என்று சொல்லி வெப் தொடரின் முழு எபிசோடும் இருந்த ஐபேடை வாங்கி சென்றார். இதுவரை அதை திருப்பி தரவில்லை. அதை வைத்து எங்களிடம் பணம் பறிக்க முயற்சிக்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம்'' என்றார்.