விஜயகாந்தின் 'ராஜதுரை' படத்துடன் ஒப்பிடப்படும் 'தி கோட்' - விமர்சனங்களுக்கு பதிலளித்த வெங்கட் பிரபு
|விஜய்யின் 'தி கோட்' படத்தை விஜயகாந்தின் ‘ராஜதுரை’ படத்துடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
சென்னை,
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான 'தி கோட் திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியான முதல் நாளே, இது விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'ராஜதுரை' படத்தின் கதை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், 'தி கோட்' படம் வெளியான பிறகு தான், அந்தப் படம் கிட்டத்தட்ட 'ராஜதுரை' படத்தின் கதை என்பது எனக்கு தெரியும். இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்துத்தான் அந்தப் படத்தை பார்த்தேன். முன்பே அந்த படத்தை பார்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக 'தி கோட்' படத்தை எடுத்திருக்கலாம். 'ராஜதுரை' படத்தை எப்படி பார்க்காமல் போனேன் என்று தெரியவில்லை' என்றார்.