'சிட்டாடல்: ஹனி பன்னி': 'சமந்தா எங்கள் முதல் தேர்வு இல்லை' - இயக்குனர் ராஜ்
|ஹனி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சமந்தாவை தேர்ந்தெடுக்கவில்லை என்று இயக்குனர் ராஜ் கூறியுள்ளார்.
மும்பை,
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள 'சிட்டாடல்: ஹனி பன்னி' தொடரில் நடித்து முடித்துள்ளார். நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் தொடரில் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'சிட்டாடல்' வெப் தொடரின் யூனிவர்சின் ஒரு அங்கமாகதான் இந்த 'சிட்டாடல்: ஹனி பன்னி' உருவாகியுள்ளது. இதில் சமந்தா ஹனி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
அடுத்த மாதம் 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் இந்த தொடர் வெளியாக உள்ளநிலையில், படக்குழுவின் உடனடி முதல் தேர்வாக நடிகை சமந்தா இல்லை என்று இயக்குனர் ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இந்த தொடரில் நடிக்க நன்கு இந்தி தெரிந்த நடிகை ஒருவரைத்தான் நாங்கள் கருத்தில் கொண்டிருந்தோம். சமந்தாவுக்கு இந்தி குறைந்த அளவே தெரியும் என்பதால் ஹனி கதாபாத்திரத்திற்கான எங்களில் முதல் தேர்வாக சமந்தா இல்லை' என்றார். அதனுடன், தெலுங்கு மற்றும் தமிழ் பேசுபவர்கள் இந்தியை கற்றுக்கொள்ள சிரமப்படுவதாக கூறும் அவர், சமந்தா விரைவாக அந்த மொழியைக் கற்றுக்கொண்டார் என்றும் பாராட்டியுள்ளார்.