இன்று பிறந்தநாள் கொண்டாடும் சினிமா பிரபலங்கள்
|இன்று சினிமா நட்சத்திரங்கள் பலர் தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
சென்னை,
ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் சைரன். அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் பிரதர். இப்படம் தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் 31-ம் தேதி வெளியாக உள்ளது.
மஞ்சுவாரியர்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, அஜித்துடன் துணிவு படத்தில் நடித்திருந்தார். தற்போது விடுதலை 2, வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.
அபர்ணா தாஸ்
பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸ், இன்று தனது 29-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து கவினுடன் நடித்த டாடா படம் இவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது. சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
சின்மயி
பிரபல பின்னணி பாடகி சின்மயி, இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். இவர் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அனுராக் காஷ்யப்
பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமானவர் அனுராக் காஷ்யப். இவர் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து லியோ, சமீபத்தில் வெளியான 'மகாராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.