நடிகர் நானி தயாரிப்பில் நடிக்கும் சிரஞ்சீவி
|சிரஞ்சீவியின் அடுத்த படத்தை நடிகர் நானி தயாரிக்கிறார்.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் இதுவரை 156 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மல்லிடி வசிஷ்டா இயக்கி இருக்கும் இப்படத்தில், 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், சிரஞ்சீவியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க உள்ளார்.
மேலும், இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை நடிகர் நானி தயாரிக்கவுள்ளார். இது குறித்த போஸ்டரை நானி மற்றும் சிரஞ்சீவி பகிர்ந்துள்ளனர். இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.