'சினிமா மீது எனக்கு ஆசை வளர சிரஞ்சீவிதான் காரணம்' - தசரா பட இயக்குனர்
|தனக்கு சினிமா மீதான ஆசை வளர சிரஞ்சீதான் காரணம் என்று ஸ்ரீகாந்த் ஒடெலா தெரிவித்துள்ளார்.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த் ஒடெலா. இவரது இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான 'தசரா'படம் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்தைத்தொடர்ந்து, நானியின் 33-வது படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் ஸ்ரீகாந்த் ஒடெலா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை நடிகர் நானி, எஸ்எல்வி சினிமாஸின் சுதாகர் செருகுரியுடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனக்கு சினிமா மீதான ஆசை வளர சிரஞ்சீவிதான் காரணம் என்று ஸ்ரீகாந்த் ஒடெலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"நான் சிரஞ்சீவியின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவன். அவரோடு பணிபுரிகிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். சிரஞ்சீவியால்தான் சினிமா மீதான ஆசை எனக்குள் வளர்ந்தது. இவ்வளவு சொன்னாலும், அவர் கேரவனை விட்டு வெளியே வரும் வரை மட்டுமே நான் அவரது ரசிகன். வெளியே வந்துவிட்டால் அவர் எனது திரைப்படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே தெரிவார்' என்றார்.