'மாயன்' படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
|இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கியுள்ள மாயம் திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் ராஜேஷ் கண்ணா எழுதி, இயக்கி இருக்கும் படம் "மாயன்". பேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்று வித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக "மாயன்" உள்ளது. இந்த படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன.
ஜி.வி.கே.எம். எலிபன்ட் பிக்சர்ஸ், டாட்டோ கணேஷ் மோகன சுந்தரம் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இந்த படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆங்கில பதிப்பில் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர பியா பாஜ்பாய், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன், ஶ்ரீ ரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார் மற்றும் பலர் நடித்துள்ளனர். 2 பதிப்புகளாக மாயன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். முதல் பதிப்பை விட இரண்டாம் பதிப்பில் கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் வருகிற 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.