நடிகை ரோகிணி மீது வழக்குப்பதிவு
|தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக நடிகை ரோகிணி உள்ளிட்ட ஏராளமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பாலின பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஊர்வலம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை அண்ணா சாலை, சிம்சன் பெரியார் சிலையில் இருந்து உழைப்பாளர் சிலை வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலம் நடத்த முயன்றனர்.
இதில், தொழிற்சங்கத் தலைவர் சவுந்தரராஜன், நடிகை ரோகிணி, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். பின்னர், நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிலையில், தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக நடிகை ரோகிணி, தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.