< Back
சினிமா செய்திகள்
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு
சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு

தினத்தந்தி
|
5 Dec 2024 7:59 PM IST

புஷ்பா-2 திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஐதராபாத்

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மைம் கோபி, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, அஜய் கோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இதனால் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் மட்டுமே ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் புஷ்பா-2 திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக ஐதராபாத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் வந்த அந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக தகவல் வெளியாகி இருந்தது.

உயிரிழந்த பெண் ரேவதிக்கு வயது 39 என்று தெரிகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய அப்பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். அவருடைய மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஐராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு பிரீமியர் காட்சி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வந்த அல்லு அர்ஜுனைக் காண கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்தபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிய ஐதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவத்தில் திரையரங்கு மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்