< Back
சினிமா செய்திகள்
அமரன் படத்தில் மாணவரின் செல்போன் எண் இடம்பெற்ற காட்சி நீக்கம்
சினிமா செய்திகள்

அமரன் படத்தில் மாணவரின் செல்போன் எண் இடம்பெற்ற காட்சி நீக்கம்

தினத்தந்தி
|
6 Dec 2024 3:34 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் - நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில், மாணவரின் செல்போன் எண் இடம்பெற்ற காட்சி நீக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

அதாவது, படத்தில் வரும் ஒரு காட்சியில் சாய் பல்லவியின் செல்போன் எண் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அந்த செல்போன் எண் தன்னுடையது என என்ஜினீயரிங் மாணவர் வாகீசன் என்பவர் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து வரும் அழைப்புகளால் என்னால் தூங்கவோ, படிக்கவோ, மற்ற வேலைகளை செய்யவோ முடிவதே இல்லை என்று கூறினார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வாகீசன் 'அமரன்' படக்குழுவுக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

மேலும் தீர்ப்பு வரும் வரை அமரன் திரைப்படத்தை திரையிலும், ஓ.டி.டி தளத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்நிலையில், அமரன் திரைப்படத்தில் மாணவரின் செல்போன் எண் வரும் காட்சி நீக்கப்பட்டு, புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதி ரிட் வழக்கில் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது என கூறியதோடு மனுவிற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார் .

மேலும் செய்திகள்