'கல்கி 2898 ஏ.டி' படத்தின் 'பைரவா' பாடல் வெளியானது
|'கல்கி 2898 ஏ.டி' படத்தின் 'பைரவா' பாடலை படக்குழு இன்று வெளியிட்டது. இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் பிரபாஸ் கடைசியாக சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பிரபாஸ், ராஜாசாப், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் பிரபாஸ் 'கல்கி 2898 ஏ.டி' எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தினை நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படம் ஆனது 2024 ஜூன் 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி கவனம் பெற்றது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் 'பைரவா' எனும் பாடல் ஜூன் 16 வெளியாகும் என்று பட குழுவினர் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் பைரவா பாடல் நேற்று வெளியாகவில்லை.
இன்று படத்தின் 'பைரவா' எனும் முழு வீடியோ பாடல் வெளியானது. 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரப் பெயர் 'பைரவா' என்பது குறிப்பிடத்தக்கது.