தெலுங்கில் நடிகராக அறிமுகமாகும் பாலகிருஷ்ணாவின் மகன்
|தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்னா 'சிம்பா' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.
ஹைதராபாத்,
'ஹனுமான்' தெலுங்கு படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடியை வசூலித்தது. இந்தப் படத்தை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. அவரது அடுத்த படம் 'சிம்பா'. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா மகன் மோக்ஷக்னா நடிகராக அறிமுகமாகிறார். ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்ஷன் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.
நடிகர் மோக்ஷக்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் பிரசாந்த் வர்மா, "பாலகிருஷ்ணாவின் ஆசியுடன், அவரது மகனை இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆந்திராவின் முதல்வராக இருந்தவர் என்டி ராம ராவ். இவருக்கு 8 மகன்கள். அதில், நந்தமுரி ஹரிகிருஷ்ணா, நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் நடிகர்களாக வலம் வருகின்றனர். நந்தமுரி ஜெயகிருஷ்ணா தயாரிப்பாளராக இருக்கிறார். நந்தமுரி மோகன கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக சில படங்களில் பணியாற்றியிருக்கிறார். நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகனான ஜூனியர் என்டிஆர் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.