< Back
சினிமா செய்திகள்
ஐயப்பன் பாடல் சர்ச்சை: இசைவாணி மீது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சரமாரி விமர்சனம்
சினிமா செய்திகள்

ஐயப்பன் பாடல் சர்ச்சை: இசைவாணி மீது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சரமாரி விமர்சனம்

தினத்தந்தி
|
29 Nov 2024 6:13 PM IST

ஐயப்பன் பாடல் பாடிய இசைவாணியை விமர்சித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில், பாடகி இசைவாணி, "ஐயம் சாரி ஐயப்பா... உள்ள வந்தா தப்பாப்பா'' என்கிற பாடலை பாடியிருந்தார். இது இந்து மத உணர்வை புண்படுத்துவதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக இசைவாணி மீதும், நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர் இயக்குநர் பா. ரஞ்சித் மீதும் போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது. இசைவாணி, பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்.

இசைவாணியின் இந்த பாடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் மூத்த குணச்சித்திர நடிகரான எம்.எஸ். பாஸ்கர், இசைவாணி பாடிய பாடலை விமர்சித்துள்ளார்.

இது குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 'சமீபத்தில் இசைவாணி அவர்கள் பாடியிருந்த 'ஐயாம் சாரி ஐயப்பா' பாடல் கேட்டேன்! ஸ்வாமி ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்டு பாடத்தொடங்கிய விதம் அருமை.. நல்ல குரல் வளம். ஆடிக்கொண்டே பாடிய ஸ்டைல் அற்புதம்! ஒரே ஒரு குறை! பாடல் தெளிவாக கேட்காத அளவுக்கு வாத்தியங்களின் ஓசை அதிகம். இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு விஷு, மகரஜோதி போன்ற விசேட நேரங்களில் பாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும்! இவர்களுக்கும் 'பூசை' சிறப்பாக நடக்கும்! நான் சிறுவனாக இருந்த போது எனது மூத்த சகோதரர் சபரிமலைக்கு இருமுடி கட்டி, வாய்க்கரிசி வாங்கி செல்வதை கண்டிருக்கிறேன். அதே போல் இவர்களும் உறவினர்கள் நண்பர்களிடம் வாய்க்கரிசி வாங்கிக்கொண்டு சென்று இசை நிகழ்ச்சி நடத்தலாம்! பாடல் எழுதியவரையும் அறிமுகப்படுத்தலாம்!

இப்படிப்பட்ட அருமையான பாடலை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பாடலாம்! எல்லா மொழி பக்தர்களும் கேட்டு 'பரிசளிப்பார்கள்' அல்லவா ? யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பாடலாம்.... என்ன ஒன்று ... ஐயன் ஐயப்பன் இதை 'நிந்தா ஸ்துதி'யாக ஏற்றுக்கொள்வார்! அவர் வாகனமாகிய புலி ஏற்றுக்கொள்ளுமா என்று தெரியவில்லை! ' இவ்வாறு கூறியுள்ளார்.

பிரபல நடிகர் எம்.எஸ் பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தனது பயணத்தை தமிழ் திரையுலகில் தொடங்கினார். அதன்பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க தொடங்கினார். இயக்குனர் விசுவின் "திருமதி ஒரு வெகுமதி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். இவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

"ஐ யம் சாரி ஐயப்பா" என இசைவாணி பாடியிருக்கும் இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கண்டனங்கள் எழும்பியுள்ளன.

மேலும் செய்திகள்