பூஜையுடன் தொடங்கும் ஆர்யாவின் புதிய படம்
|நடிகர் ஆர்யா மற்றும் நிகிலா விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம்,
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான ஆர்யா 'அறிந்தும் அறியாமலும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை, டெடி, ராஜா ராணி' போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளியான 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கிடையில், இவர் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் அடுத்த பாகத்தினை தி ஷோ பீப்பிள் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
தற்போது, நடிகர் ஆர்யா தமிழ் மற்றும் மலையாள மொழியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். 'லூசிபர், எம்புரான்' போன்ற படத்திற்கு கதை எழுதிய முரளி கோபி இப்படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இந்த படத்தை ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தில், மலையாள நடிகையான நிகிலா விமல் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 'குருவாயூர் அம்பலநடையில், வாழை' போன்ற படங்களில் நடித்துள்ளார். மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம் நேற்று ராமநாதபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுகுறித்த பதிவினை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.