'ஆடு ஜீவிதம்' படத்திற்காக ஹாலிவுட் விருது வென்ற ஏ.ஆர். ரகுமான்!
|'ஆடு ஜீவிதம்' திரைப்படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு ஹாலிவுட் இசை மீடியா விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் 'இசைப்புயல்' என அழைக்கப்படுகிறார். ஏ ஆர் ரகுமானின் 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் 'தி கோட் லைப்' திரைப்படம், பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்த இப்படத்தை பிளஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கியிருந்தார். பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகளவில் கவனம்பெற்ற நாவலை நல்ல சினிமாவாகவே மாற்றியிருந்தனர். இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் தொழில்நுட்ப ரீதியாகவும் பல பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில், ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுக்கு (HMMA) ஆடுஜீவிதம் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இன்டிபென்டென்ட் பிலிம் பிரிவில் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற இந்த விருது விழாவில் ஏ.ஆர். ரகுமான் சார்பாக, அவருக்கு பதில் ஆடுஜீவிதம் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி விருதினைப் பெற்றுக் கொண்டார்.