'மைக்கேல் ஜாக்சன் கிட்டத்தட்ட 'எந்திரன்' படத்தில் பாட இருந்தார்' - ஏ.ஆர்.ரகுமான்
|மைக்கேல் ஜாக்சன் கிட்டத்தட்ட 'எந்திரன்' படத்தில் பாட இருந்ததாக ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
சென்னை,
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2010-ல் வெளியான எந்திரன் படம் பெரிய வெற்றி பெற்றது. இதில் வசீகரன், சிட்டி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், மைக்கேல் ஜாக்சன் கிட்டத்தட்ட 'எந்திரன்' படத்தில் பாட இருந்ததாக ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'கடந்த 2009 -ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தேன். மிகவும் அன்பானவர் அவர். அங்கு நாங்கள் இசை மற்றும் உலக அமைதி குறித்து பேசினோம். என்னை அவரது குழந்தைகளுடன் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் நான் இந்தியா திரும்பியதும் இயக்குனர் ஷங்கரை சந்தித்தேன். அப்போது அவர் எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சன் பாடினால் எப்படி இருக்கும் என்றார். அதற்கு நான், அருமை அவர் தமிழில் பாடுவாரா? என்றேன்.
அதற்கு அவர் நீங்கள் என்ன சொன்னாளும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். அதனைத்தொடர்ந்து அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்கு தயாரானோம். மைக்கேல் ஜாக்சன் கிட்டத்தட்ட 'எந்திரன்' படத்தில் பாட இருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே வருடம் அவர் இறந்துவிட்டார், என்றார்.