மைக்கேல் ஜாக்சனை சந்திக்க மறுத்த ஏ.ஆர்.ரகுமான் - ஏன் தெரியுமா?
|மைக்கேல் ஜாக்சனை சந்திக்க மறுத்ததாக ஏ.ஆர்.ரகுமான் கூறினார்
சென்னை,
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் மைக்கேல் ஜாக்சனை சந்திக்க மறுத்ததாக ஏ.ஆர்.ரகுமான் கூறினார், இது குறித்து அவர் கூறுகையில்,
'கடந்த 2009-ம் ஆண்டு நானும் என் ஏஜெண்டும் லாஸ் ஏஞ்சல்சில் இருந்தோம். அப்போது அவர் மைக்கேல் ஜாக்சன் மேலாளர் என்று ஒரு நபரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
நான் அவரிடம் மைக்கேல் ஜாக்சனை சந்திக்க முடியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர் மின்னஞ்சல் அனுப்புவதாக கூறினார். அனால் ஒருவாரமாக எந்த பதிலும் வரவில்லை. நானும் விட்டுவிட்டேன்.
பின்னர் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது. அதன்பின்னர், மைக்கேல் ஜாக்சன் என்னை சந்திக்க விரும்புவதாக மின்னஞ்சல் வந்தது. ஆனால், எனக்கு மைக்கேல் ஜாக்சனை சந்திக்க விருப்பமில்லை. நான் ஆஸ்கார் விருது வென்ற பிறகு அவரை சந்திக்கிறேன். கண்டிப்பாக நான் வெல்வேன் என்று பதிலளித்தேன்.
கடைசியில், ஆஸ்கர் விருது வென்றேன். மறுநாள் காலையிலேயே மைக்கேல் ஜாக்சனை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு நாங்கள் பல விசயங்கள் குறித்து பேசினோம்,' என்றார்.
தற்போது ஏ.ஆர்.ரகுமான், பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் 'மூன் வாக்' படத்தில் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்கு பிறகு பிரபு தேவா படத்தில் இசையமைக்கிறார்.