வாழைக்கு பாராட்டு, தங்கலானுக்கு ஏன் இல்லை? திருமாவளவன் விளக்கம்
|'வாழை' படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்ததால், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். 'தங்கலான்' படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
திருமாவளவன் எம்.பி., அரசியலைத் தாண்டி அவ்வப்போது திரைப்படங்களையும் பார்த்து, அப்படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார். கடைசியாக மாரி செல்வராஜின் வாழை படத்தை பார்த்து விட்டு மாரி செல்வராஜின் இல்லத்திற்கு சென்று அவரை பாராட்டியிருந்தார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், "போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு! வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும் வரலாற்றுக் குறிப்பு. விபத்தில்தான் பலி என்றாலும், இது வெண்மணி வெங்கொடுமையின் வேறொரு வடிவம்" என படத்தில் வரும் பல்வேறு விஷயங்களை மேற்கோள்காட்டிப் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படம் வெளியானது. விக்ரம், நாயகனாக நடித்திருந்த இந்த படம், கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், விக்ரமின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இதனிடையே கடந்த வாரம் வெளியான மாரி செல்வராஜின் வாழை திரைப்படம், ரிலீஸ்க்கு முன்பே பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. சிறுவயதில் தான் சந்தித்த ஒரு கொடிய விபத்தை மையமாக வைத்து, மாரி செல்வராஜ் இந்த படத்தின் கதையை அமைத்திருந்ததாக தகவல்கள் வெளியானது.
பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கும் படங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவிக்கும் திருமாளவளவன், வாழை படத்தை பாராட்டிய நிலையில், பா.ரஞ்சித்தின் தங்கலான் குறித்து எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டுள்ளது.
ரஞ்சித்தை ஏன் பாராட்டவில்லை என்ற கேள்விக்கு, 'வாழை' படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்ததால், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். 'தங்கலான்' படத்தை பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை என்று திருமாவளவன் கூறினார். திருமாவளவனின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.