அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் - நடிகர் சிபி சத்யராஜ் கண்டனம்
|அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நடிகர் சிபி சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை,
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த வன்கொடுமை தொடர்பாக திரைத்துறையினர் பலரும் இது தொடர்பாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே நடிகர் எம் எஸ் பாஸ்கர், பெண்கள் அனைவரும் அவசியம் தற்காப்பு கலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அடுத்தது நடிகரும் இசையமைப்பாளரும் ஆன ஜி.வி. பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு துணையாக நிற்பேன் என்றும் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பெண்களுக்கு அதிக சக்தியும் பலமும் கிடைக்கட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் அந்த பதிவில் "மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களால் சமுதாயத்திற்கு அவமானம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளால் பயமுறுத்தப்படாமல் இருப்பதற்கு அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். மரண தண்டனை என்பது தற்போது காலத்தின் தேவையாக இருக்கிறது. துணிச்சலுடன் புகார் அளித்த அந்த மாணவிக்கு சல்யூட்" என்று குறிப்பிட்டுள்ளார்.