'பீனிக்ஸ்' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு
|நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘பீனிக்ஸ்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'சிந்துபாத்' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள 'பீனிக்ஸ்'. இந்த படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதற்கு முன் வெளியான டீசரில், முதல் காட்சியே சிறுவர் சீர்த்திருத்த சிறையுடன் தொடங்கியது. கையில் விலங்குடன் குற்றவாளியாக சீர்த்திருத்த பள்ளியில் முகத்தை மூடிய நிலையில் சூர்யா காணப்பட்டார். பின்னர், ஒரு பாக்ஸிங் வீரரைப் போல சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆக்சன் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் முதல் பாடலான 'யாராண்ட' பாடல் வெளியாகி வைரலானது . வித்யா தாமேந்திரன் எழுதிய வரிகளுக்கு சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.
'பீனிக்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது..
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'பீனிக்ஸ்' முன்னதாக நவம்பர் 14ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைக்கப்பட்ட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்களது தொடர்ச்சியான ஆதரவு, புரிதல் மற்றும் தங்களது பொறுமைக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.'பீனிக்ஸ்' திரைப்படம் முன் எப்போதையும் விட வலுவாக உருவாகி வெளியாகும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். அது வெளியாகும்போது ஒரு ஆரவாரமாக இருக்கும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் பிரச்னைகளால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.