தெலுங்கு படத்தில் அறிமுகமாகும் 'அனிமல்' பட நடிகர்
|வெங்கடேஷ் படத்தின் மூலம் தெலுங்கில் 'அனிமல்' பட நடிகர் அறிமுகமாகவுள்ளார்.
சென்னை,
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 1-ம் தேதி வெளியான படம் 'அனிமல்'. இதில், ராஷ்மிகா மந்தனா, திரிப்தி டிம்ரி, உபேந்திரா லிமாயி, பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த படத்தில், ரன்பீருக்கு அதிநவீன இயந்திர துப்பாக்கியின் சப்ளையராக இருந்த பிரெடி பாட்டீல் கதாபாத்திரத்தில் உபேந்திரா லிமாயி நடித்திருந்தார். இவர் தற்போது, தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கும் இப்படத்தில், வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், ராஜேந்திர பிரசாத், சாய் குமார், நரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதனையடுத்து உபேந்திரா லிமாயின் நடிப்பை இப்படத்தில் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். தமிழில் உபேந்திரா லிமாயி, விஷால் நடிப்பில் வெளியான 'சிவப்பதிகாரம்' படத்தில் நடித்துள்ளார். மேலும், 'ஜோக்வா' என்னும் திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றுள்ளார்.