< Back
சினிமா செய்திகள்
Amaran movie review
சினிமா செய்திகள்

'அமரன்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

தினத்தந்தி
|
1 Nov 2024 12:08 PM IST

முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நேற்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.

இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியானது. தற்போது இப்படம் எப்படி இருக்கிறது என்பதை காணலாம்.

சிறுவயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார் முகுந்த் வரதராஜன். கல்லூரியில் படிக்கும்போது தனக்கு ஜூனியரான இந்துவை காதலிக்கிறார். காதல் ஒரு பக்கம் இருந்தாலும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போடு ராணுவ பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். எப்படியோ பல போராட்டங்களுக்கு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் முகுந்த் - இந்துவின் திருமணம் நடைபெறுகிறது.

ராணுவத்தில் முதலில் லெப்டினன்ட்டாக இணையும் முகுந்த், பின் கேப்டனாக பதவி ஏற்க, அதனை தொடர்ந்து 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பொறுப்பேற்கிறார். ஜம்மு காஷ்மீரில் கிளிர்ச்சிக்கும், கொடூர தாக்குதல்களுக்கும் முக்கிய குற்றவாளியாக இருப்பவரை, முகுந்த் கொல்கிறார்.

அதன் பிறகு அவர் இடத்திற்கு வரும், உயிரிழந்த குற்றவாளியின் தம்பி, ஜம்முவில் இருக்கும் இந்திய ராணுவப்படையினரை வீழ்த்த திட்டம் தீட்டுகிறார். இவரது திட்டம் வெற்றி பெற்றதா? மேஜர் முகுந்த் எப்படி இறந்தார்? என்பதை அழுத்தமாகவும், ஆணித்தனமாகவும் காண்பித்திருக்கிறது அமரன் திரைப்படம்.

முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ராணுவ வீரரின் குணத்தை தன் உடல்மொழியில் சுமந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மறுபுறம் அவரை மிஞ்சும் அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். இந்து கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸாக நடிக்கவில்லை, வாழ்ந்தே இருக்கிறார் என்றே சொல்லலாம்.

கர்னலாக நடித்த ராகுல் போஸ், விக்ரம் சிங்காக நடித்த புவன் அரோரா, உமைர் லதீப் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த காட்சிகளை நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் சிஎச். சாய் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். படத்தின் அடுத்த ஹீரோ ஜிவி பிரகாஷ் குமார். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி மிரட்டி இருக்கிறார்.

நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்நீத்த ராணுவ வீரரின் தியாகத்தின் கதையாக மட்டுமில்லாமல் காதல் மனைவியின் மீதும் தன் குடும்பத்தினர் மீது முகுந்த் வரதராஜன் வைத்திருந்த நேசத்தையும் இணைத்தே திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

மேலும் செய்திகள்