விஜய் பேசியதென்ன? அமரன் பட இயக்குநர் பேட்டி
|‘அமரன்’ படம் முன்பே வெளியாகி இருந்தால் நாம் இணைந்து பணியாற்றி இருக்கலாம் என்று விஜய் கூறியதாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம், தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தாண்டு வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படங்களில் இந்த படமும் ஒன்றாகும்.
நடிகர் விஜய்யை அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் சந்தித்தார். அமரன் படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமியை விஜய் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் படம் பற்றி விஜய் பேசிய விஷயங்களை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அமரன் படம் முன்பே வெளியாகி இருந்தால் நாம் இணைந்து பணியாற்றி இருக்கலாம். ஆனால், தற்போது நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது படத்தைப் பற்றி உலகமே சொல்கிறது. உன்னை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது என விஜய் கூறியதாகக் கூறினார்.
பின்னர் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினை பார்த்து ரசித்ததாகவும் புதிய புகைப்படம் ஒன்றினை எடுத்ததாகவும் கூறினார். நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.