< Back
சினிமா செய்திகள்
அமரன் கட்டாயம் பார்க்க வேண்டிய  திரைப்படம் -  நடிகர் எஸ்.ஜே.சூர்யா
சினிமா செய்திகள்

'அமரன்' கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா

தினத்தந்தி
|
4 Nov 2024 8:08 PM IST

'அமரன்' கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமரன்' திரைப்படம் வெளியாகின. திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே, இந்த படத்தின் சிறப்பு காட்சியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 'அமரன்' படத்தை பாராட்டினார்.

இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அமரன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமாக கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட 'அமரன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.'அமரன்' படத்தை பார்த்த அண்ணாமலை படக்குழுவை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் கடந்து வசூலித்துள்ளது.

இந்நிலையில் 'அமரன்' திரைப்படத்தை பார்த்த நடிகர் எஸ்.ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர் 'அமரன்'அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்