3 நாட்களில் ரூ.621 கோடி வசூலை கடந்த 'புஷ்பா 2'
|அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.621 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சென்னை,
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ.250 கோடி வசூலை அள்ளியது. இந்தியாவில் மட்டும் ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் சுமார் ரூ.621 கோடி வசூல் செய்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.