அல்லு அர்ஜுன் கைது... புஷ்பா 2 வசூலில் ஏற்பட்ட பெரும் மாற்றம்
|புஷ்பா 2 படம் விரைவில் ரூ.1,500 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்' படத்தின் மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகமான 'புஷ்பா 2 தி ரூல்' வெளியாகி உள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் அதாவது 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தியேட்டரில் இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க அல்லு அர்ஜுன் சென்றார்.
இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத, அங்கு புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதில், ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். இந்நிலையில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது புஷ்பா 2 படத்தின் வசூலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன்படி, அல்லு அர்ஜுன் கைது செய்யப்படுவதற்கு முன்பு இருந்ததை விட கைதுக்கு அடுத்த நாள் வசூல் சுமார் 70 - 74 சதவிகிதம் வரை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விளம்பரத்திற்காகவே அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெறும் 6 நாட்களில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த புஷ்பா 2, தற்போது வரை ரூ.1,409 கோடி வரை வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ.1,500 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.