நடிகை ஸ்ரீலீலாவை 'டான்சிங் குயின்' என பாராட்டிய அல்லு அர்ஜுன்
|நடிகை ஸ்ரீலீலா 'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் இடம்பெற்றுள்ள 'கிஸ்சிக்' என்ற பாடலில் நடனமாடியுள்ளார்.
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் நடனமாடும் அந்த பாடலுக்கு 'கிஸ்சிக்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள நிலை உள்ளது. மேலும் இன்று மாலை 6.03 மணியளவில் டிரெய்லர் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் நடிகை ஸ்ரீ லீலா அல்லு அர்ஜுனுக்கும் அவரது மனைவி சினேகாவுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் அவர் இதயப்பூர்வமான குறிப்புகளுடன் ஜோடிகளுக்கு பரிசுகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனுக்கு அவர் அனுப்பிய செய்தியில், பாடலின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அற்புதமான அனுபவத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அதற்காக 'கிஸ்சிக்' பாடலில் சிறப்பாக நடனமாடியதற்காக நடிகை ஸ்ரீலீலாவை 'டான்சிங் குயின்' என்று பாராட்டியுள்ளார்.