தேசிய விருது பெற்ற 'ஆட்டம்' திரைப்படத்தை பாராட்டிய அல்லு அர்ஜுன்
|70-வது தேசிய திரைப்பட விழாவில் 'ஆட்டம்' திரைப்படம் மூன்று மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.
சென்னை,
கடந்த ஆண்டு மலையாள மொழியில் வெளியான திரில்லர் திரைப்படம் 'ஆட்டம்'. இந்த படத்தினை ஆனந்த் ஏகர்ஷி எழுதி இயக்கியுள்ளார். ஜாய் மூவி புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் அஜித் ஜாய் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜரின் ஷிஹாப், வினய் கோட்டை, கலாபவன் ஷாஜான், அஜி திருவாங்குளம் மற்றும் சுதீர் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற 70-வது தேசிய திரைப்பட விழாவில், 'ஆட்டம்' திரைப்படம் மூன்று மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது. அதாவது சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டிங் ஆகியவற்றுக்கான விருதுகளைப் பெற்று, இப்படம் மலையாள சினிமாவின் குறிப்பிடத்தக்க சாதனையை பெற்றுள்ளது.
இதற்கிடையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் இப்படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதாவது, "சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதையை வென்றதற்காக ஏகர்ஷி ஆனந்த் அவர்களுக்கும், சிறந்த எடிட்டிங்கிற்காக மகேஷ் புவனேந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், மேலும் 'ஆட்டம்' படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.