அக்சய் குமாரின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல நடிகர்
|அக்சய் குமாரின் அடுத்த படத்தை பிரபல நடிகர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை,
அஜய் தேவ்கன் மற்றும் அக்சய் குமார் நடிப்பில் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'சிங்கம் அகெய்ன்'. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் அக்சய் குமாருடன், ரன்வீர் சிங், கரீனா கபூர், அர்ஜுன் கபூர், டைகர் ஷெராப் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு முன்னர், அஜய் தேவ்கன் மற்றும் அக்சய் குமார் இருவரும் காக்கி, சூரியவன்ஷி மற்றும் சுஹா ஆகிய படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் மற்றொரு படத்தில் இணைய உள்ளனர்.
இந்த முறை நடிகராக இல்லை, இயக்குனராக அஜய் தேவ்கன் அப்படத்தில் பணிபுரிய உள்ளார். இதனை சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அஜய் தேவ்கன் தெரிவித்திருக்கிறார். அஜய் தேவ்கன் இதற்கு முன்னர், போலா, ரன்வே 34, சிவாய் மற்றும் யூ மீ அவுர் ஹம் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.