'நான் சாகவில்லை...அது எனக்கு இரங்கல் செய்திபோல உள்ளது' - அக்சய் குமார்
|அக்சய் குமார் நடித்துள்ள 'கேல் கேல் மெய்ன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்சய் குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் வரவேற்பை பெறவில்லை. கடைசியாக வெளிவந்த 'சர்பிரா' படமும் அந்த அளவுக்கு வசூலிக்கவில்லை. இதனால், சினிமா ரசிகர்கள் அக்சய் குமாரை விமர்சித்தனர்.
இந்நிலையில், அக்சய் குமார் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள 'கேல் கேல் மெய்ன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது பேசிய அக்சய் குமார், ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'எது நடந்தாலும் அது நன்மைக்கே. என்னுடைய நான்கு, ஐந்து படங்கள் சரியாக வரவில்லை. இதனால் எனக்கு, மன்னிக்கவும் நண்பரே, கவலைப்பட வேண்டாம் என்று மெசேஜ்கள் வருகின்றன. நான் சாகவில்லை, இந்த மெசேஜ்களைப் பார்க்கும்போது இரங்கல் செய்திபோல உள்ளது.
நான் எப்போதும் வேலை செய்து கொண்டேதான் இருப்பேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்கு முக்கியமில்லை. நான் என்ன சம்பாதித்தாலும் சொந்தமாக சம்பாதிக்கிறேன். நான் யாரிடமிருந்தும் எதையும் பறிக்க மாட்டேன்', என்றார்.
தற்போது அக்சய் குமார் நடித்துள்ள 'கேல் கேல் மெய்ன்' படம் வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. அதேபோல், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்ட்ரீ2' படமும் 15-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.