'குட் பேட் அக்லி' படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்?
|"குட் பேட் அக்லி" திரைப்படத்திலிருந்து தேவி ஸ்ரீ பிரசாத் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. பல்கேரியாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் அறிவிப்பு வெளியானபோது தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சில காரணங்களால் இசையமைப்பாளரை மாற்றும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாகவும் அவருக்குப் பதில் அனிருத் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் படங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. விடாமுயற்சி திரைப்படத்தில் இயக்குனர் மாற்றம் ஏற்பட்டது. விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனி இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதைப்போல புஷ்பா 2 படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு மட்டும் தான் இசையமைத்திருந்தார், தமன் பின்னணி இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.