மகன்கள் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டா பதிவு வைரல்
|இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் மகன்கள் குறித்த பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
2012 ம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அந்த படத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து 2015 ம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'வை ராஜா வை' படத்தை இயக்கினார். அப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். இதன் பின் இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது, இருவரும் வெவ்வேறு வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் சிறுவனுக்கு அவனது பொம்மைகள் வழியனுப்புவது போன்ற புகைப்படத்துடன், 'இதுவே முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் புகைப்படங்களில் கனமான ஒன்று' என இன்ஸ்டா கணக்கிலிருந்து பதிவிடப்பட்டிருந்தது. அதைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "மழலையர் பள்ளியோ... உயர்நிலை பள்ளியோ... அதே கதைதான். என் மகன்கள் இப்போதும் பொம்மைகளுடன் விளையாடுகின்றனர். சில விசயங்கள் மாறுவதேயில்லை. இந்தக் கதாபாத்திரங்கள் உணர்ச்சிப்பூர்வமானவை.." எனப் பதிவிட்டுள்ளார்.