
ஐஸ்வர்யா ராய் மகள் தொடர்ந்த வழக்கு.. கூகுள் நிறுவனம் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கூகிள் உள்ளிட்ட சில வலைத்தளங்களிலும், யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுக்கு எதிரான தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களின் முக்கியமானவர் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சனை போல் அவரது மகன் அபிஷேக் பச்சனும் இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு மகள் இருக்கிறார்.
13 வயதாகும் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா உடல்நலம், மனநலம் குறித்து கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்குரிய வகையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், யூடியூபில் சில வீடியோக்கள் இவர் குறித்து வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து தவறான தகவல்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஆராத்யா பச்சன் சமீபத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஊடகங்களில் தன்னை பற்றி தவறான தகவல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார், இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஆராத்யா பச்சன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க, கூகுள், மற்றும் யூடியூப் சேனல்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மார்ச் 17 ம் தேதி விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.