'அதன் பிறகு இனி கவர்ச்சியாக நடிக்கவே கூடாது என முடிவு செய்தேன்' - சாய் பல்லவி
|நடிகை சாய்பல்லவி, கவர்ச்சியாக நடிக்க விரும்பாததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. இப்படத்தில் இவர் நடித்திருந்த மலர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக மாறி இருக்கிறார் சாய்பல்லவி.
சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகும் 'ராமாயணம்' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சாய்பல்லவி அதிகம் மேக்கப் போடுவதும் கிடையாது, கவர்ச்சியாக உடை அணிவதும் இல்லை என்பது நமக்கு தெரிந்ததுதான். பொது நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் மற்ற நடிகைகள் மாடர்ன் உடைகளில் பங்கேற்கும்போது சாய்பல்லவி மட்டும் பாரம்பரிய சேலை அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சாய்பல்லவி, தான் ஏன் கவர்ச்சியாக நடிக்க விரும்பவில்லை என்பதை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"நான் ஒரு நடன நிகழ்ச்சியில் கவர்ச்சியாக நடனம் ஆடினேன். பிரேமம் ரிலீஸானபோது இந்த வீடியோ வைரலானது. அதிலிருந்து நான் இனிமேல் அதுபோல நடிக்கக் கூடாது என முடிவு செய்தேன். மக்கள் என்னை கவர்ச்சிக்காக பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. என்னை கவர்ச்சியாக பார்க்க நினைக்கும் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் என்னை இப்படி மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள், அதையே நானும் விரும்புகிறேன்' என்றார்.