எடை குறைந்த பிறகு...சினிமா வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி பகிர்ந்த வித்யா பாலன்
|எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறேனோ, அவ்வளவு எடை கூடியது என்று வித்யா பாலன் கூறினார்.
மும்பை,
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன், மறைந்த சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தமிழில் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.
இவர் கடைசியாக கடந்த 1-ம் தேதி வெளியான 'பூல் பூலைய்யா 3' படத்தில் நடித்திருந்தார். அனீஸ் பஸ்மி இயக்கிய இப்படத்தில் கார்த்தி ஆர்யன், திரிப்தி டிம்ரி, வித்யா பாலன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
உடல் எடையால் விமர்சிக்கப்பட்ட வித்யாபாலன், இந்த படத்தில் உடல் எடையை குறைத்திருந்தார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய வித்யா பாலன், உடல் எடை குறைந்த பிறகு சினிமா வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
'எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறேனோ, அவ்வளவு எடை கூடியது. இதனால், எனது உடலில் உள்ள பிரச்சினையை கண்டறிய ஒரு மருத்துவ குழுவை அணுகினேன். அவர்கள் என்னிடம் இது கொழுப்பல்ல, வீக்கம் என்று சொன்னார்கள்.
பின்னர், அவர்கள் கொடுத்த வீக்கத்தைக் குறைக்கும் உணவுமுறையை பயன்படுத்தினேன். இப்போது, நிறைய பேர் எனக்கு எடை குறைந்துவிட்டதாக கூறுகின்றனர். இதுவரை எனக்கு வழங்கப்படாத சில வகையான கதாபாத்திரங்களும் தற்போது வழங்கப்படுகின்றன' என்றார்.